வேலூர் அருகே விபத்தில் சிக்கிய காளைக்கு 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, காளையின் கால் பகுதியில் ‘பிளேட்’ வைத்து கால்நடை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங் காயம் அருகேயுள்ள காவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவ சாயி அண்ணாமலை. இவர், கால் நடைகளை வளர்த்து வருகிறார். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, எருது விடும் திரு விழா, மஞ்சு விரட்டு போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள காங்கேயம் காளை ஒன்றை அண் ணாமலை வளர்த்து வருகிறார்.
இந்த காளைக்கு ‘செண்பகத் தோப்பு டான்’ என்றும் அவர் பெயர் சூட்டியுள்ளார். ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பல்வேறு இடங் களில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் செண்பகத்தோப்பு டான் கலந்து கொண்டு, 6 இடங் களில் முதல் பரிசை தட்டிச் சென்றது.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக் கான எருது விடும் திருவிழா ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் நேற்றுமுன்தினம் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ண கிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து காளைகள் தனி வாகனங்களில் கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில், அணைக்கட்டு பகுதியில் நடைபெறும் எருது விடும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆலங்காயம் பகுதியில் இருந்து தனி வாகனம் மூலம் செண்பகத்தோப்பு டான் அணைக்கட்டு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அணைக்கட்டு அருகே காளையுடன் வேன் சென்றுக்கொண்டிருந்தபோது, அவ் வழியாக வந்த மினி லாரி ஒன்று வேன் மீது மோதியது.
இதில், காளையின் இடது பக்கமுள்ள கால் மேல்பகுதியில் 2 விலா எலும்புகள் முறிந்தன. இரும்பு கம்பிகள் காளையின் வயிற்றுப்பகுதியில் குத்தியதால் குடல் மற்றும் இரைப்பை வெளியே சரிந்தது. விபத்தில் காளை பலத்த காயமடைந்தது. இதைத்தொடர்ந்து, வேலூர் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவ மனைக்கு காயமடைந்த காளை கொண்டு வரப்பட்டது.
உடனே, கால்நடை மருத்துவர் கள் ரவிசங்கர், சுரேஷ், ஜோசப் ராஜ் ஆகியோர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு, கால் நடை இணை இயக்குநர் நவநீத கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அவர் விரைந்து வந்து சிகிச்சை மேற்கொண்டார். காலை 11 மணியளவில் தொடங்கிய அறுவை சிகிச்சை மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.ஏறத்தாழ 7 மணி நேரம் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. காளையின் உட லில் ‘பிளேட்’ இணைத்து அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மருத்துவர்கள் செய்து முடித்தனர்.
அதேபோல, குடல் மற்றும் இரைப்பை மீண்டும் வயிற்றுக்குள் வைத்து தையல் போடப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு மயக்கம் தெளிந்த காளை முழு உடல் தகுதியுடன் உள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறும்போது, ‘‘இது போன்ற அறுவை சிகிச்சை இந்தியாவிலேயே எந்த கால்நடைக்கும் செய்யப் படவில்லை. இது முதல் முறையாகும். விபத்தில் சிக்கிய காளையை உடனுக்குடன் இங்கு கொண்டு வந்ததால், இதை எளிதாக செய்ய முடிந்தது. இன்னும் 5 நாட்களுக்கு தொடர் சிகிச்சை அளித்தால் காளை முழுமையாக குணமடையும். காளையின் உடல் நலம் முழுமையாக தேறிய பிறகு எருது விடும் விழாவில் கலந்து கொள்ளலாம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago