காங்கயத்தில் விவசாயிகளை விசாரணைக்கு அழைத்த வருவாய்துறையின் போக்கை கண்டித்தும், பேச்சுவார்த்தை உடன்பாட்டை மீறியதாகக் கூறியும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: கோவை இருகூரில்இருந்து பெங்களூரு தேவனகொந்தி வரை ஐடிபிஎல் திட்டம் என்ற பெயரில், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள வேளாண் நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலிய நிறுவனம் செயல்படுத்த முனைந்துவருகிறது. இத்திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம். இதை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் கடந்த செப்டம்பர் 15-ம் தேதிமுதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை விவசாயிகள் கூட்டமைப்பு தொடங்கியது. இதையடுத்து கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து, அந்தந்த மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு செய்தது. அதன்படி திருப்பூர்கோட்டாட்சியர் தலைமையில்நடந்த பேச்சு வார்த்தையின்படி, தமிழக அரசு ஐடிபிஎல் திட்டம்குறித்து மறு அறிவிப்பு வரும்வரை எந்த நடவடிக்கையிலும் ஈடுபடகூடாது என்ற உடன்பாடு ஏற்கப்பட்டது. இதையடுத்து போராட்டம்தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது காங்கயம் வட்டம் படியூர், சிவன்மலை, கீரனூர், மறவாபாளையம் கிராம விவசாயிகளை வரும் 19-ம் தேதி காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு ஆணையை ஐடிபிஎல் நிலம் எடுப்புத் திட்ட அலுவலர் அனுப்பி உள்ளார்.
இது உடன்பாட்டை மீறிய செயல். காங்கயத்தில் நடைபெறும் இந்த விசாரணை நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இத்திட்டத்தை சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
மாவட்ட ஆட்சியர் இல்லாததால், வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.இதில், ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளருமான ஆர். குமார், அலகுமலை பாலசுப்பிரமணியம், ஜெயபிரகாஷ், முத்துராமலிங்கம், வழக்கறிஞர்கள் ஏசையன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன், சண்முகசுந்தரம் திமுக, கொமதேக மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சி பிரமுகர்கள் என பலர் பங்கேற்றனர்.
அப்போது காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற இருந்த விசாரணை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago