திருப்பூர் மாவட்ட தடகள சங்க செயலாளர் பி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘‘பிப்ரவரி 6 முதல் 10-ம் தேதி வரை அஸாம் மாநிலம் கவுகாத்தியில் 36-வது தேசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள தமிழக மூத்தோர் மற்றும் இளையோர் பிரிவில் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்ய, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மதுரையில் வரும் 22 முதல் 24-ம் தேதி வரை தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதிலிருந்து தேசிய போட்டிகளுக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கரோனா காலத்தையொட்டிய புதிய விதிமுறைகளாக மாநிலதடகளப் போட்டிகளில் போட்டி நேரத்தில் மட்டுமே வீரர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பயிற்சியாளர்கள், பெற்றோர் யாரும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தடகள சங்கத்தினால் வழங்கப்பட்ட தனி அடையாள எண் இருந்தால்மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். எண் இல்லாதவர்கள் https://tnathleticassociation.com/ என்ற இணையதள முகவரியில், அவர்களது முகவரி சான்று மற்றும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து எண் பெறலாம். இந்த எண், பயிற்சியாளர்களுக்கும் கட்டாயம் தேவை. இந்த முறை 60 ,80,100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டிகளுக்கு மட்டுமே அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறும்.
பிற போட்டிகளுக்கு நேரம் மட்டும் கணக்கிடப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டிக்காக வருவோருக்கு உணவு, தங்கும் இடம் வழங்கப்படாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இவற்றை தடகள பயிற்சியாளர்கள் கவனத்தில் கொண்டு, வீரர்களை தயார் செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago