திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயக் கடன், நகைக்கடன் தள்ளுபடி பொன்னேரி சமத்துவ பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயக் கடன், 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பொன்னேரி அருகே நத்தம் ஊராட்சியில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த இந்த விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர்.

இந்நிகழ்வில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சமத்துவ பொங்கல் விழாவை மறைந்த திமுக தலைவர் கருணாநிதிதான் ஏற்படுத்தினார். அதேபோல், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் சமச்சீர் கல்வி கொண்டு வந்தவரும் அவர்தான். ஆனால், அதற்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. மருத்துவப் படிப்பில் நீட் தேர்வை திட்டமிட்டு புகுத்தி மாணவர்களை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது.

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இதுவரை 16 மாணவ, மாணவிகள் பலியாகி உள்ளனர். கருணாநிதி முதல்வராக இருந்தபோதும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் நீட் தேர்வு தமிழகத்தில் நுழையவில்லை. பழனிசாமி முதல்வராக பதவி ஏற்ற பிறகுதான் தமிழகத்தில் நீட் தேர்வு நுழைந்துள்ளது. ஊழலை மறைக்கவே மத்திய அரசிடம் இந்த அரசு மண்டியிட்டு வருகிறது.

தமிழகத்தில் 4 மாதங்களில் வரப்போகிற சட்டப்பேரவை தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தித் தர தமிழக மக்கள் தயாராக உள்ளனர். ஆட்சி மாற்றம் வந்த பிறகு, உடனடியாக தமிழகத்தில் நீட் தேர்வை விலக்க, எல்லா முயற்சிகளையும் உறுதியாக எடுப்பேன்.

ஆளுங்கட்சியாக இருந்தாலும்,எதிர் கட்சியாக இருந்தாலும் விவசாயிகளுக்காக குரல் கொடுப்பது திமுக. விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி, அவர் வழி நின்று, திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயக் கடன், 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கோவிந்தராஜ், முன்னாள் அமைச்சர் சுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உமாமகேஸ்வரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம் உட்பட பல்வேறு விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்