கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா தொற்று பரவாமல் தடுக்க, ஓசூர் நகரின் மையப் பகுதியில் இயங்கி வந்த உழவர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் உழவர் சந்தை பழைய இடத்திலேயே செயல்பட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து தலைமை யில் வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் ஓசூர் உழவர் சந்தையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 5-ம் தேதி ஓசூர் உழவர் சந்தையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது ஓசூர் உழவர் சந்தை, தமிழகத்திலேயே 2-வது மிகப்பெரிய உழவர் சந்தை என்பதாலும், இச்சந்தை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளதாலும், தற்போதைய சூழ்நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வாகனங்கள் நிறுத்துதல், சரக்குகள் கையாளுதல், சமூக இடைவெளி விட்டு கடைகள் அமைத்தல், சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை இருக்கச் செய்தல் மற்றும் அனைத்து வகையான கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் போன்ற அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்காலிகமாக அங்கு சில புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு அப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால், புனரமைப்பு பணிகள் முடிவுற்ற பின்னர் ஓசூர் உழவர் சந்தை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும். அதுவரை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago