கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசில் சேவற்கட்டு தொடக்கம் மழை, தேதி குழப்பத்தால் குறைந்த அளவிலான சேவல்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசில் சேவற்கட்டு நேற்று தொடங்கியது. தொடர் மழை, தேதி குழப்பம் ஆகியவற்றால் வழக்கத்தை விட குறைந்த அளவு சேவல்களே பங்கேற்றன.

அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசில் பொங்கலை யொட்டி நடைபெறும் சேவற்கட்டு எனப்படும் சேவல் சண்டை மிக பிரபலம். நிகழாண்டு சேவற்கட்டு ஜன.13(நேற்று) தொடங்கி ஜன.15 வரை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதை யடுத்து இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வந்தன.

இதனிடையே, கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததால் ஆடுகளங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், சேவற்கட்டை ஒருநாள் ஒத்திவைத்து ஜன.14(இன்று) முதல் ஜன.16-ம் தேதி வரை நடத்த விழா கமிட்டி சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து, ஏற்கெனவே திட்டமிட்டப்படி பூலாம்வலசு சேவற்கட்டு நேற்று தொடங்கியது. சேவல்கள் பதிவு செய்யப்பட்டு, ரூ.100 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு, சேவல்களுக்கு மது வழங்கப்பட்டுள்ளதா என டோபிங் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் சண்டைக்கு அனுமதிக்கப்பட்டன.

2 ஆயிரம் சேவல்கள்

முகக்கவசம் அணிந்து வந்த சேவல் உரிமையாளர்கள் மட்டுமே களத்தில் அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் ஆகியவை விழா கமிட்டி சார்பில் வழங்கப்பட்டன.

இதில், நாமக்கல், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய வெளி மாநிலங் களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் சண்டையில் பங்கேற்றன. வழக்கமாக தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்கும் நிலையில், தொடர் மழை, தேதி குழப்பம் ஆகியவற்றால் நேற்று வழக்கத்தை விட சேவல்கள் குறைவாகவே பங்கேற்றன. பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

ஆவேசமாக மோதிய சேவல்கள்

சேவல்கள் மோதுவதற்கான களத்தில் கட்டாளிகள் எனப்படும் ஜாக்கிகள் சேவல்களை மோத விட்டனர். இதில், சேவல்கள் ஆவேசமாக மோதிக் கொண் டன. வெற்றி பெற்ற சேவல் உரிமையாளர்களுக்கு தோற்ற சேவல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

சேவல் காலில் கத்தி கட்டக் கூடாது என விதி உள்ள போதும் சேவல்கள் காலில் கத்தி கட்டி மோத விடப்பட்டன. மேலும், சேவல் காலில் கட்டப்படும் கத்தி விற்பனை ஆடுகளப் பகுதியிலேயே நடைபெற்றது. கத்தி சாணை பிடிக்கும் தொழி லாளர்களும் அங்கு முகாமிட்டிருந் தனர்.

தொடர்ந்து இன்றும், நாளையும் சேவற்கட்டு நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE