ஒரே பகுதியை பல வார்டுகளாகபிரித்ததற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், முறையாக எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைக்காது என்றும், வார்டு மறுசீரமைப்பில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்திஉள்ளனர்.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகராட்சி தாராபுரம் சாலை42-வது வார்டுக்கு உட்பட்ட கரட்டாங்காடு பகுதி பொதுமக்கள், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் நேற்று அளித்த மனு:
கரட்டாங்காட்டில் உள்ள 6 வீதிகள், தில்லை நகர், எம்.ஆர்.நகர், என்.பி.காலனி, தனலட்சுமி லே-அவுட், ராயப்பா லே-அவுட், எஸ்.கே.என்.லே-அவுட், தாராபுரம் பிரதான சாலை ஆகியவை மாநகரின் 3-வது மண்டலத்துக்கு உட்பட்டது. இப்பகுதியில் மொத்தவாக்காளர்களின் எண்ணிக்கை 8400. தற்போது வார்டுசீரமைப்பின்படி வெளியிடப்பட்டதில், வாக்காளர் பட்டியலின் படி கரட்டாங்காட்டில் உள்ள 6 வீதிகளில், 1 முதல் 3 வீதிகள் கொண்டபுதுக்காட்டை 50-வது வார்டு பகுதியில் சேர்த்தும், 4 முதல் 6 வீதிகள்56-வது வார்டு செரங்காடு பகுதியிலும், தாராபுரம் பிரதான சாலை 51-வது வார்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரே பகுதியை 3 வார்டுகளாக பிரித்துள்ளனர்.
கரட்டாங்காட்டில் உள்ள 6 வீதிகளுக்கு 3 கவுன்சிலர்கள் வருவதால், வார்டுகளில் அடிப்படை வசதிக்கான குடிநீர், சாக்கடை, குப்பை, தெருவிளக்கு போன்ற பணிகளில் இடையூறு ஏற்படும். அதேபோல, வார்டு பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களின் மத்தியில் பிரச்சினைகள் உருவாகும். இதுதொடர்பாக எங்கள் பகுதியிலுள்ள அனைவரும் கலந்தாலோசித்தோம். அதன்படி, எங்கள் வார்டில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையெழுத்து பெற்று ஆட்சியரிடம் மனுவாக அளிக்கிறோம். இதுவரை இருந்த நடைமுறையின்படி, கரட்டாங்காடு வார்டை தனி வார்டாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago