தஞ்சாவூரிலிருந்து தாயாரை தேடி வழி தவறி திருப்பூர் வந்த சிறுவன், சிறுமி மீட்பு பெற்றோரை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் இருந்து வழி தவறி திருப்பூர் வந்த சிறுவன், சிறுமி ஆகிய இருவரும், மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப் பட்டனர். மேலும், அவர்களது பெற்றோரை கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் வாஷிங்டன் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுவன், சிறுமியை அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் மீட்டனர். அவர்களிடம் விசாரித்ததில், சிறுவன் பெயர் சந்தோஷ் (15), சிறுமி தமன்னா (10) என்பதும் தெரியவந்தது., பெற்றோர் செல்வம், மீனாட்சி ஆகியோருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்ததும், தற்போது கருத்துவேறுபாடு காரணமாக தாயார் திருப்பூரிலும், தந்தை தஞ்சாவூரிலும் வசித்த நிலையில், தாயாரை தேடி தஞ்சாவூரில் இருந்து திருப்பூர் வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சிறுவர்களை பெருமாநல்லூர் போலீஸார் மீட்டு, முதற்கட்டமாக திருமுருகன்பூண்டி மற்றும் அவிநாசியில் உள்ளகாப்பகத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில், மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன்னிலையில் நேற்றுஅவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். குழந்தைகளிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், பெற்றோரை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "தாயாரின் அலைபேசி எண் இல்லாததால், சிறுவர்கள் அளித்த முகவரியில் சென்று பார்த்தபோது, அவர் வீடு மாறி சென்றது தெரிய வந்தது. குழந்தைகள் நலக்குழுவினர், சைல்டு லைன்அமைப்பினர் மற்றும் போலீஸார் சேர்ந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூரில் உள்ள தந்தையின் அலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் வசித்ததாக சில ஊர்களின் பெயர்களை சிறுவன் அளித்துள்ளார். அதன்மூலமாக, சிறுவர்களின் தந்தை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அதுவரை, சிறுவர்களை காப்பகத்தில் தங்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்