திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியில்உள்ள விவசாயிகள், இது தொடர்பாக நிரந்தரத்தீர்வை ஏற்படுத்தவும் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து தாராபுரம் வட்டம் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பது குறித்து, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட பாசன சபை நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். பரம்பிக்குளம் - ஆழியாறு வடிநிலவட்டம் பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கூறும்போது, "பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டபாசனப் பகுதிகளில் மழை பெய்வதால், நீரின் தேவை குறைவாக உள்ளது. ஆகவே, திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடலாம் என பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட பாசன சபை நிர்வாகிகளால் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு நாளொன்றுக்கு 400 கன அடி வீதம் 2000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது’’ என்றார்.
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் காளிமுத்து கூறும்போது, "சமீபத்தில், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்கு முதல்வர் கே.பழனிசாமி வந்தபோது, உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். இதனை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். தற்போது, அரசூர் ஷட்டரில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிட உதவிய முதல்வர், அமைச்சர்கள், பாசன சபைத் தலைவர்கள் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நன்றி.
அரசூர் ஷட்டரில் இருந்து உப்பாறு அணைக்கு 43 கி.மீ. பயணித்து தண்ணீர் வருகிறது. வழியில் 18 தடுப்பணைகள் உள்ளன. நிலத்தடி நீர்மட்டத்துக்கு மட்டுமே பயன்படும் உயிர் தண்ணீர்தான் இது. ஆண்டுக்கு இருமுறை திறக்க வேண்டும்.
பாசனத்துக்கு வேண்டுமென்றால் அரசூர் ஷட்டர் முதல்உப்பாறு அணைவரை, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தைபோல புதை குழாய் திட்டத்தை அமைத்து நிரந்தரத் தீர்வை உருவாக்கி, தண்ணீர் வீணாகாமல் செய்ய வேண்டும். பிஏபி பகுதியில் நன்கு மழை பெய்திருப்பதால், 5 நாட்கள் தண்ணீர் திறப்பு என்பதை 10 நாட்களாக மாற்ற வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago