அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் பொங்கலுக்கு விற்பனையாகும் செங்கரும்பு வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விற்பனை மந்தமாக உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம், தா.பழூர், உள்ளியகுடி, ஆலம்பள்ளம், கொலையனூர், சுத்தமல்லி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500 ஏக்கரில் விவசாயிகள் செங்கரும்பு பயிரிட்டுள்ளனர்.
நடப்பாண்டு பொங்கல் விழா நாளை கொண்டாடப்படும் நிலையில், அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக கரும்பு பயிரிடப்பட்டுள்ள வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் கரும்பு வெட்டும் வேலைக்கு குறைந்தளவு தொழிலாளர்கள் வருவதாலும், தொடர்மழையின் காரணமாக வியாபாரிகள் கரும்புகளை கொள்முதல் செய்ய வராததாலும் பெரும்பாலான கரும்புகள் வயலில் வெட்டப்படாமலேயே உள்ளன.
இதுகுறித்து செங்கரும்பு பயிரிட்டுள்ள கொலையனூரை சேர்ந்த விவசாயி முருகேசன் கூறியது:
பொங்கலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், தொடர் மழை பெய்வதால் கரும்பு விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்பதால் வியாபாரிகள் கரும்புகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை என்றார்.
விவசாயி விக்னேஷ் கூறியது:
பொங்கலுக்குள் கரும்புகளை விற்றால் மட்டுமே செலவு செய்த தொகையையாவது பெற முடியும்.
தற்போது தொடர் மழை பெய்வதால், வியாபாரிகள் கேட்கும் விலைக்கு கரும்புகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 2 நாட்களுக்கு மழை இல்லாமல் இருந்திருந்தால் பெரும்பாலான கரும்புகள் வெட்டப்பட்டிருக்கும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago