சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் பிரிவு சாலை அருகில் சாலையைக் கடப்பதற்காக இடைவெளி விடப்பட்டிருந்தது.
அங்கு அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டதால் அண்மையில் அந்த இடைவெளி மூடப்பட்டது. இதையடுத்து செங்குணம் கிராம மக்கள் 3 கிலோமீட்டர் தூரம் சுற்றி சென்று சாலையைக் கடக்க வேண்டிய நிலை உருவானது. இதனால் கால விரயமும், அதிக எரிபொருள் செலவும் ஏற்பட்டது.
இதனால் செங்குணம் பிரிவு அருகே நெடுஞ்சாலையில் சாலையைக் கடந்து செல்ல வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், செங்குணம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் தனராஜ் நேற்று முன்தினம் இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் நெடுஞ்சாலையின் மையத்தடுப்பை அகற்றி வாகன ஓட்டிகள் சாலையைக் கடந்து செல்ல வசதியாக வழி ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த பெரம்பலூர் போலீஸார் தனராஜை நேற்று கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அவரை விடுவிக்கக் கோரியும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தனராஜை போலீஸார் விடுவித்தனர். இதனால் பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago