பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் அதிகாரியின் காரை வழிமறித்து சோதனை ரூ.97 ஆயிரம் பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

பெரம்பலூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளரின் காரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். இதில், ரூ. 97 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்ட மேலாளர் ராம்குமார் தலைமையில், பொங்கல் பண்டிகை நாட்களில் மது விற்பனை குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

அப்போது, டாஸ்மாக் மேற்பார்வையாளர்களிடம் குறிப்பிட்டதொகையை கட்டாயப்படுத்தி வசூல் செய்யப்படுவதாக பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனிடையே, ஆலோசனைக் கூட்டத்துக்கு பின், மாவட்ட மேலாளர் ராம்குமார் தனது காரில் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்று கொண்டிருந்தார்.

அரியலூர் சாலையில் பேரளி அருகே சென்று கொண்டிருந்தபோது ராம்குமாரின் காரை வழிமறித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், காருக்குள் ஒரு பெட்டியில் மறைத்து வைத்திருந்த கணக்கில்வராத ரூ.97 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் ராம்குமார் மற்றும் காரில் அவருடன் சென்ற குன்னம் பகுதி டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் முருகவேல், கண்ணதாசன், கார் ஓட்டுநர் ராஜகோபால் ஆகியோரை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சந்திரசேகர், இன்ஸ்பெக்டர்கள் ரத்தினவள்ளி, சுலோச்சனா அடங்கிய குழுவினர் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்