வேலூர் மாவட்டத்தில் மலை கிராம மக்களுக்காக 2 புதிய தொடக்க பள்ளிகள் ஆட்சியரின் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை

By செய்திப்பிரிவு

அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட தானிமரத்தூர், பெரிய பனப்பாறை உள்ளிட்ட மலை கிராமங்களில் புதிதாக 2 தொடக்க பள்ளிகளை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக் கட்டு வட்டத்துக்கு உட்பட்ட பீஞ்சமந்தை மற்றும் அருகே உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில், சுமார் ரூ.450 கோடி மதிப்பிலான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மலை கிராம மக்களுக்கு சாலை, மின் வசதிகளுடன் வேளாண் சார்ந்த தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் புதிதாக 25 தொடக்கப் பள்ளிகளை தொடங்க பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தின் பரிந்துரையின்பேரில், அணைக் கட்டு வட்டம் பீஞ்சமந்தை அருகே யுள்ள மலை கிராமங்களான தானிமரத்தூர், பெரிய பனப்பாறை பகுதியில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு தொடக்கப் பள்ளிக் கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும், மாணவர்களுக்கு சத்துணவு வழங்க ஏதுவாக சத்துணவு மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. பள்ளி மாண வர்கள் அனைவருக்கும் அரசின் அனைத்து இலவச பொருட்கள் வழங்கவும், புதிய பள்ளிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பரிந்துரையின்பேரில், நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட்ட அருந்ததிபாளையம் கிராமத்திலும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பரிந்துரையின்பேரில், ஜோலார்பேட்டை ஒன்றியம் செட்டேரி கிராமத்திலும், திருவண் ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பரிந்துரையின்பேரில், தண்டராம்பட்டு வட்டம் இருளர்குடிசை பகுதியில் புதிதாக தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்