மருதேரி கிராமத்தில், அகரம் - மருதேரி பாலத்தின் அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.10.90 கோடி மதிப்பில் படுகை அணை அமைக்கும் பணிதொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மருதேரி ஊராட்சி, பொதுப்பணித் துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் ரூ.10.90 கோடி மதிப்பீட்டில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்டும் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். பர்கூர் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், முன்னாள் எம்பி அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி படுகை அணை அமைக்க பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
அகரம் - மருதேரி பாலத்தின் அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே படுகை அணை அமைக்கும் பணிக்கு அரசாணை வெளியிடப்பட்டு ரூ.10.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தடுப்பணை 143.60 மீட்டர் நீளத்திற்கு, 1.40 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 1.30 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இத்தடுப்பணை யினால் அகரம், மருதேரி குடிமேனஅள்ளி, தேவீரஅள்ளி, பண்ணந்தூர் மற்றும் வாடமங்களம் ஆகிய கிராமங்களில் உள்ள 1155 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும் தடுப்பணையைச் சுற்றி அமைந்துள்ள 4 கூட்டு குடிநீர்த்திட்ட கிணறுகள் மூலம் வீரமலை, மருதேரி, அகரம், காரிமங்கலம் மற்றும் நாகரசம்பட்டி ஆகிய 5 கிராமங்களிலுள்ள சுமார் 25,000 மக்களுக்கு நிரந்தரமான குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும், என்றார்.
இவ்விழாவில், வேளாண் விற்பனைக்குழு தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, மேல் பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் குமார், உதவிப்பொறியாளர் (பாசனப் பிரிவு) முருகேசன், ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago