கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதி, கர்நாடக, ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. பர்கூர் அருகே உள்ள குருவிநாயனப்பள்ளி, காளிக்கோயில் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இருமாநில எல்லையோர கிராமங்களில் பொங்கல் விழாவினை தொடர்ந்து நடைபெறும் எருதுவிடும் விழாவில் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் காளைகள் அழைத்து வருவது வழக்கம். நிகழாண்டில் ஆந்திராவில் ஜல்லிக்கட்டு மற்றும் எருதுவிடும் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து எருதுவிடும் விழாவிற்காக காளைகள் கொண்டு வந்தால் பறிமுதல் செய்வதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக குப்பம் புறநகர் இன்ஸ்பெக்டர் யதீந்திரா, குடிப்பள்ளி உதவி ஆய்வாளர் உமாமகேந்திர ஆகியோர் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும், ஆந்திராவில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, எருதுவிடும் விழாவில் தமிழக எல்லையோர கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான காளைகள் பங்கேற்கும். இந்த ஆண்டு எருதுவிடும் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குப்பம், குடிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் எருதுவிடும் விழா நடைபெற உள்ளதாக பொய்யான தகவல்கள் பரவி வருகிறது.
இதனை நம்பி யாரும் தங்களது காளைகளை அழைத்து வர வேண்டாம். எருதுவிடும் விழாவிற்காக யாராவது காளைகளை அழைத்து வந்தால், காளைகள் பறிமுதல் செய்வதுடன், தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago