தொழில்நுட்ப வளர்ச்சியால் மண்ணில் அழியும் நுண்ணுயிரிகள் ‘நீரா’ கருத்தரங்கில் வேளாண் துறை அலுவலர் தகவல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் நீரா கருத்தரங்கம் மற்றும் பங்குதாரர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.

திருப்பூர் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் எஸ்.மனோகரன் பேசும்போது ‘‘நம் மூதாதையர் காலத்தில் பூச்சிமருந்து, வேதிப்பொருள் இல்லை. 1960-ம் ஆண்டுக்கு பிறகு மண்ணில் உள்ள ஆர்கானிக் கார்பனின் அளவு குறைந்து கொண்டே இருப்பது கவலை அளிக்கிறது. ஒரு கைப்பிடி மண்ணில் 700 கோடி நுண்ணுயிரிகள் உள்ளன. இன்றைக்கு ஆர்கானிக் கார்பனின் அளவு மண்ணில் 0.4 சதவீதமாக மாறி உள்ளது. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் மண்ணில் நுண்ணுயிரிகள் அழிந்து வருகின்றன. மண்ணை மலடாக்கும் ஆபத்தான போக்கால், கார, அமில நிலை அதிகரித்து வருகிறது. மண்ணை வளப்படுத்த நுண்ணுயிர் உரங்கள்ரூ.6-க்கு அரசு மூலம் விற்கப்படுகின்றன. இதனை விவசாயிகள் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.

உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இணை இயக்குநர் வி.சுந்தரராஜ் பேசும்போது ‘‘சுண்ணாம்புச் சத்து அதிகமாக இருப்பதால், திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிக அளவில் உள்ளது. அமிலம் கலக்காத பானமாக நீரா உள்ளது.கிராமங்கள்தோறும் பங்குதாரர்களை உருவாக்கி வருகிறோம். விவசாயிகளுக்கு செய்யும் சேவை, அனைத்து உயிர்களுக்கும் செய்யும் சேவை. நீராவில் உள்ள லாரிக் அமிலம் உடலின் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு பெருக்கும். விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றினால்தான் நாம் நன்றாக வாழ முடியும்’’ என்றார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் என். ஆனந்தராஜா பேசும்போது ‘‘வீரிய ஒட்டு ரகம், நாட்டு ரகம் தென்னை 36-39 மாதங்களில் வளர்பவை. விவசாயிகள் மண்ணின் வளத்துக்கு திரும்பத் திரும்ப ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும்.தென்னைகளுக்கு தண்ணீர் மட்டும்கொடுத்தால் போதாது. தென்னையை தாக்கும் சுருள்வெள்ளை ஈ, ஆட்கொல்லி கிடையாது. தென்னை தோட்டங்களில் களைக்கொல்லிகளை பயன்படுத்தினால் சுருள் வெள்ளை ஈயின்தாக்குதல் அதிகமாகும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்