பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென, சமீபத்தில் ஊத்துக்குளியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில்தமிழக முதல்வர் கே.பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் அளித்த மனுவில், "தமிழகத்தில் 16549 பகுதிநேர சிறப்பாசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தப் பட்டது.
மாணவர்களின் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக் கலை மற்றும் வாழ்க்கைத்திறன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, பகுதி நேர பணியிடங்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்டது.
வாரத்துக்கு மூன்று அரை நாட்கள் வீதம் மாதத்துக்கு 12 அரை நாட்கள் பணிபுரிந்து, மாதம் ரூ.7700 ஊதியம் பெற்று வருகிறோம். வாரத்துக்கு மூன்று அரை நாள் பணி என்பது கற்பித்தலுக்கு போதுமானதாக இல்லை. ஆகவே, பகுதிநேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக மாற்றி பணி நிரந்தரம் செய்து, மாணவர்களுக்கு முழுமையான கற்றல், கற்பித்தலுக்கு வழிவகை செய்ய வேண்டும். தற்போது பணிபுரியும் 1290 பகுதிநேர ஆசிரியர்களில், 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 45 வயதைக் கடந்தவர்கள். எங்கள் குடும்பம் உட்பட அனைவரும் மிகுந்த சிரமத்தில் வாழ்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஊத்துக்குளி வட்டம் முரட்டுபாளையம் நியூகாலனி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி ராதா, முருகன் ஆகியோர் அளித்த மனுவில், "இருவரும் பட்டப் மேற்படிப்பு படித்துவிட்டு, ஆசிரியர் பட்டமும் பெற்றுள்ளோம். பார்வை இழந்த நிலையில், எங்களுக்கு பெண் குழந்தை உள்ளது. மிகுந்த வறுமையான சூழலில் வாழ்ந்து வருகிறோம். கல்வித் தகுதிக்கேற்ப வேலை வழங்கும்படி வேண்டுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
மற்றொரு கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளி சந்திரிகா அளித்த மனுவில், "மகளுக்கு காது கேட்கும் திறன் இல்லை.
அறுவை சிகிச்சையும் செய்துள்ளோம். காதுகேட்கும் கருவி மகளுக்கு பொருத்த வேண்டும். விலை அதிகமாக இருப்பதால், கூலி வேலை செய்து பிழைத்துவரும் எங்களால் வாங்க முடியவில்லை. இதுதொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுத்து, மகளுக்கு காது கேட்கும் கருவி வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இலவச வீட்டுமனைப் பட்டா
ஊத்துக்குளி சிகேசி நகரைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், "கட்டிட வேலைக்கு சென்று வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கோரி பல முறை மனுஅளித்தும் நடவடிக்கை இல்லை. வறுமையான நிலையில் வாழ்வதால், பல ஆண்டு கோரிக்கையான வீட்டுமனைப் பட்டாவை மாவட்ட நிர்வாகம் மூலமாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago