திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் மானியத் தொகையாக 35 பேருக்கு ரூ.40.50 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.
தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் ஊரகப் புத்தாக்கத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஊரகத் தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல், வருமானத்தை பெருக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை மற்றும் வள்ளியூர் ஆகிய நான்கு வட்டாரங்களைச் சேர்ந்த 102 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின்கீழ் ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 24 பேருக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவியும், 12 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் மானியத்தையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் பி.சுதாதேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கந்தன் சரவணன், ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago