மன்னார்குடி திருப்பாற்கடல் குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரப்ப கோரிக்கை

By செய்திப்பிரிவு

மன்னார்குடி திருப்பாற்கடல் குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலின் புனித தீர்த்தங்களில் ஒன்றான திருப்பாற்கடல் குளம், பாமணி ஆற்றின் அருகில் அமைந்துள்ளதால், மன்னார்குடிக்கு ஆற்றில் தண்ணீர் வந்தவுடன் முதலில் நிரம்பும் குளங்களில் ஒன்றாக இந்தக் குளம் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக, மன்னார்குடி நகரத்தில் உள்ள அனைத்துக் குளங்களும் முழுமையாக நிரம்பிவரும் நிலையில், திருப்பாற்கடல் குளத்தில் முழங்கால் அளவுக்கு மட்டுமே தண்ணீர் நிரம்பியுள்ளது.

இந்தக் குளத்தில் மீன் வளர்ப்பதற்காக குத்தகைக்கு எடுத்தவர்கள், குளத்தில் அதிக தண்ணீரை தேங்கவிடாமல், வெளியேற்றுவதே இதற்கு காரணமாகும். எனவே, திருப்பாற்கடல் குளத்தில் முழுவதுமாக தண்ணீர் நிரப்ப மன்னார்குடி நகராட்சி மற்றும் ராஜகோபால சுவாமி கோயில் நிர் வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மன்னார்குடி வர்த்தக சங்கப் பொருளாளர் எஸ்.பிரபாகரன் கூறியதாவது:

கடந்தாண்டு மன்னார்குடியில் அனைத்து சேவை சங்கங்களும் இணைந்து நீர்நிலைகளுக்கு தண்ணீர் நிரப்பியபோது, திருப்பாற்கடல் குளத்துக்குதான் முதன்முதலாக தண்ணீர் நிரப்பப்பட்டது. ஆனால், ஓரிரு நாட்களிலேயே தண்ணீரை வெளியேற்றி, வெகுவாக குறைத்துவிட்டனர். ஹரித்ரா நதி தெப்பக் குளத்தை மீன் வளர்ப்பு குத்தகைக்கு விடாமல் பராமரிப்பதைப் போல, திருப்பாற்கடல் குளத் தையும் பராமரிக்க ராஜகோபால சுவாமி கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.

இந்தக் குளத்தில் தண்ணீர் குறையும் நிலையில், அருகிலுள்ள காகிதப்பட்ட றைத் தெரு, திருப்பாற்கடல் தெரு, அரிசிக் கடை சந்து மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் கோடைக்காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிடுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் இதை உணர்ந்து, திருப்பாற்கடல் குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்