நீலகிரி மலை ரயிலை சாதாரண கட்டணத்தில் இயக்க ரயில்வே அமைச்சரை சந்தித்து முறையிடுவேன் என நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து குன்னூருக்கு மலை ரயிலில் நேற்று பயணித்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மலை ரயிலை கரோனா காலத்தில் தனியாருக்கு குத்தகைக்குவிட முயன்றதை நிறுத்தியும், கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ரயிலை இயக்கவும் கோரி ரயில்வே அதிகாரிகளையும், மத்திய ரயில்வே அமைச்சரையும் சந்தித்து முறையிட்டேன். தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ரயில்வே நிர்வாகத்துக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
கரோனா காலத்துக்கு பின்னர் முன்பதிவு கட்டணத்துடன் மலை ரயில் இயக்கப்படுகிறது. பயணக் கட்டணத்தை குறைக்கவும், சாதாரண கட்டணத்தில் ரயிலை இயக்கவும் மத்திய அமைச்சரை சந்தித்து தீர்வு ஏற்படுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார். திமுக மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக், முன்னாள் அமைச்சர் க.ராமசந்திரன் உட்பட நிர்வாகி கள் பலர் ரயிலில் பயணித்தனர்.
குன்னூர் ரயில் நிலையத்தில் ஆய்வு
மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான கல்லாறு, ஆடர்லி, ஹில்குரோவ், ரன்னிமேடு போன்ற ரயில் நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சீனிவாசன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.இதனை தொடர்ந்து குன்னூர் ரயில் நிலையம் பணிமனை போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘கடந்த டிசம்பர் 31-ம் தேதி முதல் இயக்கப்பட்ட மலை ரயில் வழக்கம்போல தினந்தோறும் இயக்கப்படும். முன்பதிவு செய்யப்படும் பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்ட மலை ரயிலின் சேவை குறிப்பிட்ட காலம் நிறைவடைந்ததை அடுத்து நிறுத்தப்பட்டது. குன்னூர் முதல் ரன்னிமேடு வரை சிறப்பு ரயில் இயக்குவது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் ஆலோசித்த பின்பு முறையான அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago