சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளான ஆத்தூர், கெங்கவல்லி வட்டாரங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 80 மிமீ மழை பதிவானது.
சேலம் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக, மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளான ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன் பாளையம் வட்டாரங்களில் கனமழை பெய்தது. மேலும், பகல் முழுவதும் விடாமல் தூறல் நீடித்தது.
மழை காரணமாக வீரகனூர் வழியாக பாயும் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கெங்கவல்லியை அடுத்த ஆணையம்பட்டி அடுத்த நடுவலூர் தடுப்பணை நிரம்பி மழை நீர் அருகில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இதனிடையே, சேலம் உட்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் பரவலாக மழை பெய்த போதிலும், நெல் உள்ளிட்ட பயிர்கள் கதிர் முற்றி அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில், வழக்கமான பருவத்துக்கு மாறாக, பனிக்காலத்தில் பெய்த மழையால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்தனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 80 மிமீ மழை பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதியில் பெய்த மழை யளவு (மில்லி மீட்டரில்) விவரம்: கரி யகோவில் 70, கெங்கவல் லியில் 60, வீரகனூர் 64, ஆத்தூர் 49.40, காடையாம்பட்டி 14.00, ஆனைமடுவு 37, ஏற்காடு 37, வாழப்பாடி 6, எடப்பாடி 1.20, பெத்தநாயக்கன்பாளையம் 23, சேலம் 17.40 மிமீ மழை பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரியில் பரவலாக மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பிற்பகலில் பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு நேற்று காலை 7 மணி வரை நீடித்தது. மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.நேற்று காலை 7 மணி நிலவரப்படி மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:ஊத்தங்கரை 52.8 மில்லி மீட்டர், போச்சம்பள்ளி 49.2, பாரூர் 46, பெணுகொண்டாபுரம் 44.4, நெடுங்கல் 43.2, சூளகிரி 32, ராயக்கோட்டை 30, ஓசூர் 28.2, தேன்கனிக்கோட்டை 27.4, கிருஷ்ணகிரி 22.2 மிமீ.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago