வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 10 மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை

By செய்திப்பிரிவு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை 10 மையங்களில் இன்று நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் முதற் கட்டமாக கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற் காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முன்களப் பணியாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா தடுப்பூசி பணிக்கான ஒத்திகை தமிழகத்தில் இன்று நடைபெறவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 மையங்களில் இந்த ஒத்திகை நடைபெற உள்ளது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 5 மையங்களில் இந்த ஒத்திகை நடைபெறுகிறது.

இதுகுறித்து வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் கூறும்போது, ‘‘இந்த ஒத்திகையின்போது தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் எவ்வாறு இருக்கும் என பார்க்கப்படுகிறது.

கரோனா தடுப்பூசியை எவ்வாறு கையாள் வது, தடுப்பூசி செலுத்தும் பணியின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்ட ஒத்திகை நடைபெறும் ஒவ்வொரு மையத்திலும் தலா 25 பேர் வீதம் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறுஞ்செய்தியை ஒத்திகை மையத்தில் காண்பித்து பதிவு செய்வது, பின்னர் தடுப்பூசி செலுத்திக் கொள்வது, தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வழங்குவது என இந்தப் பணிகளுக்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்பது குறித்தெல்லாம் பார்க்கப்படும்.

மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் நபர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்போது ஏதாவது தடங்கல் ஏற்படுகிறதா? என பார்க்கப்படும். இந்த ஒத்தி கையில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் அடுத்த கட்டமாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்