வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி மறியலுக்கு முயன்ற சிஐடியு அமைப்பினர் கைது

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்துக்கு முயன்ற சிஐடியுஅமைப்பினர் 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூரில் மத்திய தொழிற்சங்க அமைப்பான சிஐடியு சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்ட தலைவர் கே.உன்னி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

புதிதாக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்யவேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, ஏழை, எளிய மக்களுக்கு கரோனா கால நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வேண்டும், தொழிலாளர் நலவாரிய செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும், தூய்மை மற்றும் அங்கன்வாடி பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபடபேரணியாக சென்றனர். பாதுகாப்புப் பணியில் இருந்த மாநகரபோலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, மறியலில் ஈடுபட முயன்றதாக 200 பேரை கைது செய்தனர்.

இதேபோல உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பாக நேற்று சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு நிர்வாகிகள் வெ.ரங்கநாதன், நகரசெயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் கனகராஜ், மாதர் சங்கநிர்வாகி சசிகலா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப் பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்