பெங்களூரு சிறுமி உயிரிழந்த விவகாரம் தாய்க்கு மனநல சிகிச்சையளிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

சேவூர் அருகே குப்பைக் கிடங்கில் மீட்கப்பட்ட பெங்களூரு சிறுமியின் தாயாருக்கு மனநல நிபுணர்கள் மூலமாக ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகேயுள்ள தண்டுக் காரம்பாளையம் ஊராட்சி புளியம்பட்டி சாலையில் உள்ள குப்பை தரம் பிரிக்கும்கிடங்கில் கடந்த மாதம் 25-ம் தேதிபெங்களூருவை சேர்ந்த சைரா (5) என்ற சிறுமி மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.

கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி கடந்த 4-ம் தேதி உயிரிழந்தார். இவ்விவகாரத்தில் தற்கொலைக்கு முயன்ற சிறுமியின் தாய் சைலஜா குமாரி (39) கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்டபோது அவருக்கு சைலஜாகுமாரி அளித்த மருந்துகள் உள்ளிட்ட விவரங்களை உறுதி செய்யும் முனைப்பில் சேவூர் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தகவல்களையும் உறுதி செய்த பிறகே, சைலஜா குமாரி மீது கூடுதலாக வழக்கு பதிவு செய்ய முடியும் என்பதால் இத்தகைய நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சைலஜாகுமாரிக்கு, மனநல நிபுணர்களைக் கொண்டு சிகிச்சையளிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சிறுமியின் தாயார் மன உளைச்சலில் இருக்க வாய்ப்புள்ளது. அவரிடமிருந்து தெளிவான பதில்களைப்பெற முடியவில்லை. இதற்காகவே மனநல நிபுணர்கள் மூலமாக உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சையளிக்க திட்டமிட்டுள்ளோம்.

விசாரணையில் கிடைக்கும் தகவல்களை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்