காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் பொங்கலுக்குப் பிறகு 10-ம் வகுப்பு, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக 1,564பள்ளிகளில் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
காஞ்சி மாவட்டத்தில் 234 பள்ளிகளிலும், செங்கை மாவட்டத்தில் 583 பள்ளிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 747 பள்ளிகளிலும் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெற்றது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் அனைத்திலும் இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
அந்தந்த பள்ளிகளில் 10-ம்வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் மட்டும் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் பொங்கலுக்குப் பின்பு தங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிகள் திறக்கலாமா, வேண்டாமா? என்பது தொடர்பாக கருத்துகளை கேட்டிருந்தனர். இது தொடர்பாக அவர்களுக்கு ஒரு படிவத்தையும் வழங்கி இருந்தனர்.
இந்த கருத்துகேட்புக் கூட்டத்தில் 20 சதவீத பெற்றோர் மட்டுமே பங்கேற்றனர். ஆனால்பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பள்ளிகள் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். இது குறித்து சில பெற்றோரிடம் கேட்டபோது, “10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புமாணவர்கள் அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்ள உள்ளனர். அவர்கள் கடைசி 3 மாதங்களாவது பள்ளியில் கல்வி கற்க வேண்டும். உரிய சமூக இடைவெளியைப் பின்பற்றி பாதுகாப்புடன் வகுப்புகளை நடத்த பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இக்கருத்து கேட்புக் கூட்டத்துக்கு பெற்றோர் வருகை குறைவாகவே இருந்தது குறித்து முதன்மை கல்வி அலுவலக வட்டாரங்களிடம் கேட்டபோது, “இந்த கரோனா காலத்தில் நாங்கள் ஒரே நாளில் அனைவரையும் வரவழைத்து கருத்துகளை கேட்க முடியாது. இரு நாட்கள் கருத்துகேட்புக் கூட்டத்தை வைத்துள்ளோம்.
ஜனவரி 7-ம் தேதியும் (இன்று)மாணவர்களின் பெற்றோரிடம் இருந்து கருத்து கேட்கவுள்ளோம். பெரும்பாலான பெற்றோரின் கருத்துகளை அரசுக்கு அனுப்பி வைப்போம். அதன் அடிப்படையில் அரசுதான் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago