தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை

By செய்திப்பிரிவு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று பரவலாக பெய்த மழையால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகல் 12 மணியளவில், கிருஷ்ணகிரி, ஒரப்பம், பர்கூர், காவேரிப்பட்டணம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கிருஷ்ணகிரி நகரில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகரின் பல்வேறு சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளித்தன. இதனால் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வந்தனர்.

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 173 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு கால்வாய்கள் மூலம் 173 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 50.60 அடிக்கு தண்ணீர் உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு முதலே மழை பெய்து வந்தது. நேற்று பகலில் தருமபுரி மாவட்டம் முழுக்க அவ்வப்போது இடைவெளி விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அரூர் பகுதியில் 37 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஒகேனக்கல் பகுதியில் 23 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 18 மி.மீ, பென்னாகரம் பகுதியில் 17 மி.மீ, தருமபுரி பகுதியில் 8 மி.மீ, பாலக்கோடு பகுதியில் 4.3 மி.மீ, மாரண்ட அள்ளியில் 4 மி.மீ அளவுக்கு மழை பதிவாகி இருந்தது. பகலில் மழை பெய்து கொண்டே இருந்ததால் தருமபுரி மாவட்டத்தில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சேலத்தில் மழை

சேலம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், பகலில் குளிர் காற்று வீசி வந்தது. நேற்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது. ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, தலைவாசல், வீரகனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளில் இடைவெளி விட்டு கனமழை பெய்தது. மேலும், நாள் முழுவதும் சாரல் நீடித்தது.

சேலத்தில் பழைய பேருந்து நிலையம், அம்மாப்பேட்டை, அன்னதானப்பட்டி, அஸ்தம்பட்டி, அழகாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகலில் சாரல் மழை பெய்தது. மாலையில் சுமார் ஒரு மணி நேரம் வரை கனமழை பெய்தது. அதன் பின்னரும் சாரல் மழை நீடித்தது. சீலநாயக்கன்பட்டியில் சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்