அரக்கோணத்தில் இருந்து சேலத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய மெமு மின்சார ரயில் சேவையும், விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு முன்பதிவு செய்து பயணிக்கும் ரயில்கள் வேலூர் மாவட்டம் வழியாக நேற்று முதல் இயக்கப்பட்டன.
நாடு முழுவதும் கரோனா பரவல் அச்சத்தால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. சரக்கு ரயில் சேவை மட்டும் முதற்கட்டமாக தொடங்கிய நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு மத்திய, மாநில மற்றும் முன்களப் பணியாளர்கள் மட்டும் பயணிக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
அதன்படி, சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து, சமூக இடை வெளியுடன் முன்பதிவுடன் கூடிய பயணிகள் ரயில் சேவை படிப்படியாக தொடங்கியது.
பின்னர், தனியார் நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள் செல் லும் வகையில் சாதாரண பயணிகள் ரயில்களுக்குப் பதிலாக முன்பதிவு செய் யப்பட்ட பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் இயக்கப் பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் வழியாகவிழுப்புரம்-திருப்பதி இடையிலான தினசரி பயணிகள் ரயில் மற்றும் அரக்கோணத்தில் இருந்து சேலத்துக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டும் முன்பதிவு செய்து பயணிக்கும் மின்சார ரயில் சேவை நேற்று முதல் தொடங்கியது.
இதில், விழுப்புரம்-திருப்பதி இடையிலான சிறப்பு ரயில் காலை 5.25 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் பகல் 12.25 மணிக்கு திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கி ரயில் புறப்படும். இந்த ரயில் சித்தூர், காட்பாடி, போளூர், தி.மலை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இதில், பொதுப்பெட்டி இல்லாமல் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாகவே இயக்கப்பட்டது.
மெமு மின்சார ரயில்
அரக்கோணத்தில் இருந்து சேலம் வரை இயக்கப்பட்ட சாதாரண பயணிகள் ரயில் சேவை நேற்று முதல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளுடன் கூடிய மெமு மின்சார ரயில் சேவையாக நேற்று முதல் தொடங்கியது. அதி நவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.நீண்ட தொலைவுக்கு பயணிக்க வேண்டும் என்பதால் பயணிகளுக்காக இந்த ரயிலில் கழிப்பறை வசதி ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு முன்பு இயக்கப்பட்ட பயணிகள் ரயிலில் கழிப்பறை வசதி இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அரக்கோணத்தில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு சோளிங்கர், வாலாஜா ரோடு, முகுந்தராயபுரம், காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago