சத்திரக்குடி அருகே உள்ள போகலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி உட்பட 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், பரமக்குடி முதல் மதுரை வரையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் திருப்பாச் சேத்தியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பரமக்குடி முதல் ராமேசுவரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படவில்லை. பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை அகலப் படுத்தப்பட்ட இருவழிச்சாலையே அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பரமக்குடி-ராமநாதபுரம் இடையில் போகலூரில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இச்சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பரமக்குடி மார்க்சிஸ்ட் சார்பில் நேற்று சுங்கச் சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, சத்திரக்குடி பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல் முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி தலைமையில் பேரணி நடந்தது. பேரணியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.செல்லத்துரை அப்துல்லா, திமுக ஒன்றியச் செயலாளர் கதிரவன், மதிமுக ஒன்றியச் செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணி சென்றபோது தடுத்து நிறுத்திய போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையிலான 40 பெண்கள் உள்ளிட்ட 125 பேரை கைது செய்தனர்.
கே.பாலபாரதி கூறியதா வது: இப்பகுதி விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்களிடம் விதிகளுக்கு மாறாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த விதியை மாற்றி சுங்கச்சாவடியை அகற்ற ராமநாதபுரம் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை இல்லையெனில் அஹிம்சை வழியில் சுங்கச் சாவடியை அகற்று வோம் எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago