கீழ்பென்னாத்தூர் அருகே ஏரியை சேதப்படுத்தி தண்ணீர் வெளியேற்றப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த காட்டு மலையனூர் ஊராட்சியில் அணையேரி உள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வட கிழக்குப் பருவ மழை காரணமாக, அணை நிரம்பியது. இந் நிலையில் ஏரியில் இருந்து நேற்று முன் தினம் திடீரென தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, “ஏரியில் உள்ள ஒரு பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். தொடர் மழையால் ஏரி நிரம்பியது. இதனால், ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த பகுதியில் மழைநீர் தேங்கியது. அதனை பாதுகாக் கவே, ஏரியில் கோடி போகும் பகுதியை உடைத்து, தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வருவாய்த் துறையிடம் முறையிட்டுள்ளோம்.
ஏரியில் உள்ள தண்ணீர் மூலம் விவசாய பாசனம் மட்டுமின்றி குடிநீர் தேவையும் நிறைவேறும். ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் வெளியேறுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago