திருப்பூர், உதகையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள கூட்டுறவு பண்டகசாலை மார்க்கெட் கிளை நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் தலா ரூ.2,500 ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு, தலா ரூ.2,500 ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார்.

ரூ.55.5 கோடி ஒதுக்கீடு

பின்னர் அவர் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய ஆறு தாலுகாக்களில் 402 நியாயவிலைக் கடைகள் இயங்குகின்றன. 2,17,794 குடும்ப அட்டைகளில், 2,15,601 குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறுபவர்களாக உள்ளனர். மேலும், சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள், அரிசி பெறும் அட்டைதாரர்களாக மாற்றிக் கொள்ள கால அவகாசம் வழங்கியது. இதன்மூலமாக, சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாறியுள்ளனர். அவர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக, மாவட்டத்துக்கு ரூ.55.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், விலையில்லா வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது.

வரும் 12-ம் தேதி வரை சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வாங்க தவறியவர்கள் 13-ம் தேதி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், குன்னூர் எம்எல்ஏ சாந்தி அ.ராமு, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கப்பச்சி டி.வினோத், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் வாஞ்சிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை, தாராபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக, ஏற்கெனவே வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் கூடிய ரொக்கம் நேற்று விநியோகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறும்போது, "உடுமலை தாலுகாவுக்கு உட்பட்ட நியாயவிலைக் கடைகளில் 105265 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட வேண்டும். நேற்று 22,693 பேருக்கு பட்டுவாடா செய்யப்பட்டது.

தாராபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் 96,516 குடும்ப அட்டைதாரர்களில், நேற்று ஒரு நாளில் மட்டும் 16,900 பேருக்கு ரொக்கம் பட்டுவாடா செய்யப்பட்டது" என்றனர்.

இதேபோல, திருப்பூர் மாநகரில் பல்லடம் சாலையிலுள்ள கூட்டுறவுநியாய விலைக் கடையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை சட்டப்பேரவைத் துணைத் தலைவரும், மாநகர், மாவட்ட செயலாளருமான பொள் ளாச்சி ஜெயராமன் தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்