சேவூர் அருகே குப்பைக் கிடங்கில் மீட்கப்பட்டு கோவையில் சிகிச்சையில் இருந்த சிறுமி உயிரிழப்பு தாயார் மீது மேலும் ஒரு வழக்கு?

சேவூர் அருகே குப்பைக் கிடங்கில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட 5 வயது சிறுமி, சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே தண்டுக்காரம்பாளையம் ஊராட்சி புளியம்பட்டி சாலையில் குப்பை தரம் பிரிக்கும் கிடங்கில், கடந்த 25-ம் தேதி 5 வயது சிறுமி காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்தார். சேவூர் போலீஸார் சென்று சிறுமியை மீட்டனர். அவிநாசியில் முதலுதவிக்குப் பிறகு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே 25-ம் தேதி இரவு சிறுமியை விட்டுச்சென்ற அவரது தாயார் சைலஜாகுமாரி (எ) சர்மிளாகுமாரியை (39) சேவூர் போலீஸார் பிடித்து விசாரித்தனர். மருத்துவரான சைலஜாகுமாரி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகள் கைராவுடன் (5) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார்.

கரோனா பாதிப்பால் வேலை இழந்த சைலஜாகுமாரி, சில மாதங்களாக வறுமையின் பிடியில் இருந்துள்ளார். இதையடுத்து, தமிழகத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டு, குழந்தையுடன் திருப்பூர் வந்துள்ளார். அப்போது மகளுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்கு மருந்து கொடுத்ததாகவும், கொடுக்கப்பட்ட மருந்தின் அளவு அதிகமானதால் சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், தண்டுக்காரம்பாளை யம் அருகே மகளுடன் இறங்கிய சைலஜாகுமாரி, ஏற்கெனவே குறிப்பிட்ட இடத்தில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு, எலி மருந்து வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது. இதையடுத்து, சைலஜாகுமாரியை போலீஸார் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தாயும், மகளும் சிகிச்சையில் இருந்த நிலையில், உடல் நிலை மோசமடைந்ததையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அவிநாசி சாலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் கைரா மாற்றப்பட்டார். இருப்பினும், அங்கு நேற்று மாலை சிறுமி உயிரிழந்தார்.

இதுகுறித்து சேவூர் போலீஸார் கூறும்போது, "சிறுமிக்கு மூளைக்கு செல்லும் நரம்பில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, மூளை செயலிழந்து உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மருத்துவர்களின் அறிக்கை வந்த பிறகே முழு விவர மும் தெரியவரும். சிறுமியின் உடல், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், சிறுமியை அஜாக்கிரதையாக கையாண்ட தாக சைலஜாகுமாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சிறுமி உயிரிழந்துள்ளார்.

அவரது இறப்புக்கு தாயின் செயல்பாடே காரணம்என மருத்துவ அறிக்கையில் தெரியவந்தால், மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்படும். அதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்