கிருஷ்ணகிரி, தருமபுரியில் 9.49 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 9.49 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம், ஒப்பதவாடி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.2500 ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து, பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் ரூ. 2,500 வழங்கி தொடங்கி வைத்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 1,094 ரேஷன் கடைகள் மூலம் 5,13,318 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ. 3.85 கோடி மற்றும் ரொக்கப் பணம் ரூ. 128.38 கோடி என மொத்தம் ரூ. 132.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளது.

அத் துடன் 61,618 வேட்டி, 25,483 சேலை கள் என மொத்தம் 87,101 பேருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது, என்றார்.

தருமபுரிக்கு ரூ.116.49 கோடி

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2500 நிதி உதவி வழங்கும் பணி தருமபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. காரிமங்கலம் வட்டம் பெரியானஅள்ளி ரேஷன் கடையில் நடந்த தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தலைமை வகித்தார்.

தமிழக உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் நிதியுதவி வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். மேலும், 163 விவசாயிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலான பயிர்க் கடன் களையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியது:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 36 ஆயிரத்து 847 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அட்டைக்கு தலா ரூ.2500 வீதம் நிதியுதவி வழங்க ரூ.116.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 1,071 ரேஷன் கடைகள் மூலம் பரிசுத் தொகுப்பு மற்றும் நிதியுதவி, வரும் 12-ம் தேதி வரை வழங்கப்படும்.என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்