தமிழக அரசு அறிவித்த 2,500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அமைச்சர் கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் ஆகியோர் நேற்று திருப்பத்தூரில் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2,500 ரூபாய் அடங்கிய பரிசுத் தொகுப்பு ஜனவரி 4-ம் தேதி முதல் வழங் கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதியில் 79,626 குடும்ப அட்டைகள், ஜோலார்பேட்டை தொகுதியில் 79,994 குடும்ப அட்டைகள், வாணியம்பாடி தொகுதியில் 77,676 குடும்ப அட்டைகள், ஆம்பூர் தொகுதியில் 71,986 குடும்ப அட்டைகள் என மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 282 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் ஜலகம்பாறை சாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு நியாய விலை கடை எண்-2-ல் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். முன்னதாக, மாவட்ட வழங்கல் அலுவலர் அதியமான் கவியரசு வரவேற்றார்.
தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். அப்போது, கே.சி.வீரமணி பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 282 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.77.32 கோடி செலவில் 2,500 ரூபாய் ரொக்கமும், ரூ.2.32 கோடி செலவில் அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட இதரப்பொருட்களும் வழங்கப்படுகின்றன.
இதற்கான டோக்கன்கள் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர் களுக்கும் வீடு, வீடாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த டோக்கனில் பரிசுத் தொகை பெற வேண்டிய நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம், தேதியில் நியாய விலைக் கடைகளுக்கு சென்று சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் தங்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை தவறாமல் பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கமும் வழங்கப்படும்.
பொங்கல் பரிசு தொகுப்பு நியாய விலை கடை ஊழியர்கள் மூலமாகவே மட்டுமே வழங்கப்படும். இதை உறுதி செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
பொதுமக்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம், தேதியில் நியாய விலைக் கடைகளுக்கு சென்று சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து தங்களுக்கான பரிசுத் தொகுப்பை தவறாமல் பெற்றுக்கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago