கூட்டணி கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிட இருப்பதால் திமுக கூட்டணி விரைவில் உடையும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து

By செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் உள்ளவர்கள் தனி சின்னத்தில் போட்டியிட விரும்புவதாலும், மு.க. அழகிரி புதிய கட்சி தொடங்க இருப்பதால் விரைவில் திமுக கூட்டணி உடையும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட பாஜக சார்பில் அணி பிரிவு பிரதிநிதிகள் மாநாடு மாங்காய் மண்டி அருகே நேற்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசும்போது, "விவசாயிகளில் தற்கொலையை தடுக்கவே மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு நல்லது நடப்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தடுக்கிறார்.

விவசாய சட்டங்களுக்கு எதிராக திமுக நடத்திய பந்த் தோல்வியில் முடிவடைந்தது. தமிழகத்தில் திமுக கட்சியினர் நடத்தி வரும் பள்ளிகளில் 4 மொழிகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. ஆனால், அரசுப்பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்கள் பல மொழிகளை கற்க நினைத்தால் அதை திமுகவினர் தடுக்கின்றனர்.

திமுக நடத்தும் கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளிக்க மறுத்த திமுகவினர் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர்.

மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தெரிகிறது. அதேபோல, திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடபோவதாக அறிவித்துள்ளனர். இதனால், திமுக கூட்டணி விரைவில் உடையும். தமிழகத்தில் பாஜக வளர்ச்சிபெற்றுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் பேசும்போது, ‘‘வரும் தேர்தலில் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே தமிழக மக்களுக்கு பெரிய நன்மையாகும். 1.50 லட்சம் இலங்கை தமிழர்களின் ஆவி அறிவாலயத்தை சுற்றிக் கொண்டிருக்கிறது. அது ஒரு போதும் திமுகவை ஆட்சிக்கு வரவிடாது.

மீத்தேன் திட்டம், ஸ்டெர்லைட் விரிவாக்க திட்டத்துக்கு அனுமதி யளித்த ஸ்டாலினை தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள். கடந்த 50 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு திமுக எதுவுமே செய்யவில்லை. தமிழகத்தில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி தான்.

வேலூர் மாவட்டத்தில் 2 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பாஜக போட்டியிட வாய்ப்புள்ளது. அவ்வாறு போட்டியிடும் பட்சத்தில் அந்த தொகுதிகளில் பாஜக வெற்றிபெற வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்