திருவள்ளூர், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வை 34 தேர்வுக் கூடங்களில் 7 ஆயிரத்து 841 பேர் எழுதினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-1 தேர்வு நேற்று நடைபெற்றது.
இதற்காக, காஞ்சிபுரம் பகுதியில் 21 தேர்வு மையங்களில் 29 தேர்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இம்மாவட்டத்தில் 9 ஆயிரத்து 536 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். ஆனால், நேற்று 5 ஆயிரத்து 384 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.
இத்தேர்வு மையங்களில், கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள 29 ஆய்வு அலுவலர்களும், 3 பறக்கும் படையும், 6 சுற்று குழுவும் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், அனைத்து தேர்வுக் கூடங்களிலும் ஒளிப்பதிவாளர் அமர்த்தப்பட்டு, ஒளிப்பதிவு செய்யப்பட்டது. தேர்வர்கள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், குரூப்-1 தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாமதமாக வந்த நபர்களை, தேர்வு மையங்களுக்குள் செல்ல தேர்வுத் துறையினர் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு 13 மையங்களில் நடைபெற்றது. 4 நடமாடும் குழுக்கள், ஒரு பறக்கும் படை அலுவலர், 15 கண்காணிப்பு அலுவலர்கள், 15 முதன்மை கண்காணிப்பாளர்கள், 16 வீடியோ கிராபர்களுடன் இத்தேர்வு நடைபெற்றது.
மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பித்த 5,132 பேரில் 2,457 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். 2,675 பேர் தேர்வு எழுதவில்லை என ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் அருகே அரண்வாயல் பகுதியில் உள்ள பிரதியுஷா பொறியியல் கல்லூரி மையத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago