சிவகங்கை மாவட்டத்தில் சுமைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல்சிவகங்கை நுகர்பொருட்கள் வாணிபக் கழகக் கிடங்கில் ரேஷன் பொருட்களை ஏற்றாததால் காத்திருக்கும் லாரிகள்.

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் சுமைத் தூக்கும் பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதால் ரேஷன் கடைகளுக்கு பொருட்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 7 நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் இருந்து உணவுப் பொருட்களை பாம்கோ நிறுவனம் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கிறது.

இதற்காக தனியார் சரக்கு லாரிகளை பாம்கோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் மாதந்தோறும் முதல் வாரத்திலேயே அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதற்காக, குறிப்பிட்ட அளவு பொருட்கள் முந்தைய மாதம் 20-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மீதமுள்ள பொருட்கள் சம்பந்தப்பட்ட மாதத்தின் 5-ம் தேதியில் இருந்து அனுப்பப்படும்.

தற்போது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக கடந்த வாரம் பொங்கல் பொருட்கள் லாரிகளில் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், கூடுதல் கூலி கேட்டு ரேஷன் பொருட்களை லாரிகளில் ஏற்ற நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் பணியாளர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் ரேஷன் பொருட்களை கடைகளுக்குக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுமை தூக்கும் பணியாளர்கள் கூறியதாவது: சரக்கு லாரிகளில் கூடுதலாக ஏற்றப்படும் ஒவ்வொரு டன்னுக்கு கூலியாக ரூ.17.50 தருகின்றனர். அதை ரூ.57.50 ஆக உயர்த்தித் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று கூறினர்.

லாரி ஒப்பந்ததாரர் கூறுகையில், டீசல் விலை உயர்வு போன்றவற்றால் ஏற்கெனவே சிரமப்படுகிறோம். கூலியை அதிகரித்து வழங்கினால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றனர்.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொங்கல் பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டு விட்டன. இந்த மாதத்துக்கான 10 சதவீத பொருட்களை மட்டுமே தற்போது அனுப்ப வேண்டியுள்ளது. அதையும் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்