பால் நிலுவைத் தொகை ரூ.500 கோடியை பொங்கலுக்குள் வழங்க வேண்டும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஆவின் நிர்வாகம் கடந்த மூன்று மாத காலம் நிலுவை வைத்துள்ள ரூ.500 கோடியை உற்பத்தி யாளர் களுக்கு பொங்கலுக்குள் வழங்க வேண்டும், என நாமக்கல்லில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் முகமது அலி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநில ஆவின் நிர்வாகமும், மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு ஒன்றியங்களும், கடந்த மூன்று மாதமாக, பாலுக்கான பணம் ரூ.500 கோடியை நிலுவை வைத்துள்ளது. இத்தொகையை பொங்கலுக்குள் வழங்க வேண்டும். கால்நடை தீவனங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இப்கோ, அமுல் மூலமாக கால்நடை தீவனங்கள் வழங்கப் படுவதாக சொல்லப்படுகிறது.எனினும் கால்நடை தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. விலையும் கூடுதலாக உள்ளது. கடுமையான நெருக்கடி சூழ்நிலையில், 50 சதவீதம் மானிய விலையில், வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும், பால் உற்பத்தியாளர்கள் கடுமையான நெருக்கடியில் உள்ளனர். எனவே, பால் விலையை லிட்டருக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் விலையுடன் சேர்த்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் அறிவிக்க உள்ளோம். வரும், பிப்.20-ல், அதற்கான கோரிக்கை சிறப்பு மாநாடு பெரம்பலூரில் நடத்தப்பட உள்ளது.

ஆவின் நிர்வாகம் கொள்முதல், விற்பனைக்கு ஏற்ற வகையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பால் மூலம் அனைத்து ஒன்றியங்களிலும் லாபம் வந்தது. தற்போது, பெரும்பாலான மாவட்ட ஒன்றியங்களில் நஷ்டம் உள்ளது. இதே நிலை நீடித்தால், ஆவின் நிர்வாகத்தை மூடக்கூடிய ஆபத்து ஏற்படும் என அச்சப்படுகிறோம். இதை நம்பி 11 ஆயிரம் ஆரம்ப பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் உள்ளன. ஐந்து லட்சம் பால் உற்பத்தியாளர் குடும்பங்கள் வாழ்கின்றன. எனவே, ஆவின் நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்