பேரிடர் மேலாண்மை திட்டத்தில் இடுபொருள் நிவாரணத்தை ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 லிருந்து ரூ.20,000 என உயர்த்தியது வரவேற்கத்தக்கது என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு புரெவி, நிவர் புயல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். குறிப்பாக, பல ஆண்டுகாலமாக பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் இடுபொருட்களுக்கான மானியம் ரூ.13,500 என நிர்ணயம் செய்து வழங்கப்படுவது நியாயமில்லை. இடுபொருட்களின் தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூடுதலாக்கி அறிவித்து அதன் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று, ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் மானியம் 20 ஆயிரம் என அறிவித்து, அதை இழப்பீடாக அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேபோல, சிறு, பெரு விவசாயிகள் என்ற பாகுபாடில்லாமல், பாதிக்கப்பட்ட அனைத்து விளைநிலங்களுக்கும் கணக்கிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வலியுறுத்தினோம். அதையும் ஏற்று, 2 ஹெக்டேருக்கு உட்பட்டவர்களுக்குதான் இழப்பீடு என்கிற கட்டுப்பாடுகளை தளர்த்தி, சாகுபடி செய்துள்ள அனைத்து நிலங்களுக்கும் சிறிய, பெரிய விவசாயிகள் என்ற பாகுபாடின்றி இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்த முதல்வரின் அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி ரெங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். கஜா புயல், கரோனா வைரஸ், நிவர் புயல், அதிக மழை போன்றவற்றால் அடுத்தடுத்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்தப் பிரச்சினைகளை தமிழக முதல்வர் பழனிசாமி சிறப்பாக கையாண்டுள்ளார்.
புயல், மழை பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்திருக்கும் நிலையில், மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருப்பது தமிழக முதல்வர் பழனிசாமியின் உதவும் மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago