சென்னை காசிமேடு, புதுச்சேரி மீன்பிடி துறைமுகங்களில் நிலவும் நெரிசலைக் குறைக்க ரூ.235 கோடியில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 2 மீன்பிடி துறைமுகங்களை அமைக்க மீன்வளத் துறை திட்டமிட்டுள்ளது.
இந்திய அளவில் மீன்பிடி தொழிலில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 7 லட்சம் டன் மீன்கள் கையாளப்படுகின்றன. ஆண்டுக்கு 93,477 டன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதன் மூலம் ரூ.5,308 கோடி அந்நிய செலாவணி கிடைக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 கடலோர மீனவ கிராமங்கள் உள்ளன. அவற்றில் 29 ஆயிரத்து 745 மீனவர்கள் உள்ளனர். இவர்களிடம் 12 இயந்திரப் படகுகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் உள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீனவ கிராமங்களில் 14 ஆயிரத்து 935 மீனவர்கள் உள்ளனர். இவர்களிடம் 20 இயந்திரப் படகுகளும், 1,209 விசைப் படகுகளும், 202 நாட்டுப் படகுகளும் உள்ளன.
இந்த இரு மாவட்டங்களிலும் மீன்பிடி துறைமுகங்கள் இல்லாததால் இம்மாவட்ட மீனவர்கள் தங்கள் இயந்திர படகுகளை, சென்னை, புதுச்சேரி, கடலூர் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி, இயக்குகின்றனர். அதனால் அந்த துறைமுகங்களில் ஏற்படும் இடநெருக்கடியால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதைத் தவிர்க்க ரூ.235 கோடியில் செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரை குப்பத்தில் 5 ஹெக்டேர் பரப்பிலும், விழுப்புரம் மாவட்டம் அழகன் குப்பத்தில் 6.69 ஹெக்டேர் பரப்பிலும் இரு மீன்பிடி துறைமுகங்களை அமைக்க மீன்வளத் துறை திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஆண்டுக்கு தலா 12 ஆயிரம் டன் மீன்களை கையாள முடியும். இவ்விரு துறைமுகங்களில் 220 இயந்திர மீன்பிடி படகுகள், 600 விசைப் படகுகள் ஆகியவற்றை நிறுத்தி இயக்க முடியும்.
மீனவர்கள் வசிப்பிடம் அருகில்...
இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மீன்வளத் துறை சார்பில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆலம்பரை குப்பத்தில் அமைக்கப்பட உள்ள மீன்பிடி துறைமுகப் பணி தொடர்பாக மீனவ மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்த உள்ளது. அக்கூட்டம் வரும் ஜன. 29-ம் தேதி காலை 10.30 மணிக்கு செய்யூர் தாலுகா, கிழக்கு கடற்கரை சாலையில், தென்பாக்கம் பகுதியில் உள்ள சாய்ராம் மகாலில் நடைபெற உள்ளது.இத்திட்டம் தொடர்பாக ஆலம்பரை குப்பம் மீனவர் எஸ்.சதீஷ்குமார் கூறும்போது, “இதுநாள் வரை புயல் காலங்களில், படகுகளைப் பாதுகாக்க, புதுச்சேரிக்கோ, காசிமேட்டுக்கோ செல்ல நேர்ந்தது. புதிய துறைமுகத்தால், அந்தப் பிரச்சினை இருக்காது" என்றார்.
தென்னிந்திய மீனவர் நலச்சங்கத் தலைவர் கு.பாரதி கூறும்போது, “ஆலம்பரை குப்பத்தில் தற்போது துறைமுகம் அமைய உள்ள இடமும், மீனவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.
வாழ்விடம் ஓரிடத்திலும், பணி செய்யும் இடம் ஓரிடத்தில் இருந்தால், சிரமம். எனவே மீனவர்கள் வசிப்பிடத்தை ஒட்டி துறைமுகத்தை அமைக்க வேண்டும்'' என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago