சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு ரூ. 1,752 கோடியில் டெண்டர்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1,752.73 கோடியில் செயல் படுத்தப்பட உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.616 கோடியில் 2009-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் முழுமையாகவும், சிவகங்கை மாவட்டத்தில் 779 ஊரகப் பகுதிகள், சிவகங்கை நகராட்சி மற்றும் திருப்பத்துார், நெற்குப்பை, இளையான்குடி ஆகிய 3 பேரூராட்சிகள் இணைக்கப்பட்டன. இந்த திட்டத்தில் இணையாத பகுதிகளில் தொடர்ந்து குடிநீர்ப் பிரச்சினை இருந்து வந்தது. எனவே, விடுபட்ட பகுதிகளை காவிரி கூட்டு குடிநீர்த் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து விடுபட்ட பகுதிகளுக்காக புதிய காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை 2014-ம் ஆண்டு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ரூ.933 கோடிக்கான திட்ட மதிப்பீட்டு அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நிதி ஒதுக்கீடு இல்லாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்.10-ம் தேதி ரூ.1,752.73 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது இத்திட்டத்துக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 8 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களைச் சேர்ந்த 2,459 ஊரகக் குடியிருப்புகள், 3 நகராட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 11.40 லட்சம் பேர் பயன்பெறுவர். இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இம்மாதத்துக்குள் பணி தொடங்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்