வெள்ளகோவில் அருகே பரிகார பூஜையின்போது மூதாட்டி கொல்லப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது

By செய்திப்பிரிவு

வெள்ளகோவில் அருகே பரிகார பூஜையின்போது பர்னிச்சர் கடை உரிமையாளரை தாக்கி, அவரது மனைவியை கொலை செய்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஏ.பி.புதூரை சேர்ந்த தம்பதி ஆறுமுகம் (66), ஈஸ்வரி (60). இவர்களது மகன் உதயகுமார், பல்லடத்தில் மனைவியுடன் வசித்து நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். வெள்ளகோவில் செம்மாண்டம்பாளையம் சாலையில் ஆறுமுகம் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். திருமணமாகி நீண்ட நாட்களாகியும் உதயகுமாருக்கு குழந்தை இல்லாததால், ஆறுமுகம்- ஈஸ்வரி தம்பதி பரிகார பூஜை செய்ய திட்டமிட்டனர். இதற்காக ஆள் தேடியபோது, வெள்ளகோவில் பகுதியில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்த மயிலாடுதுறையை சேர்ந்த சக்திவேல் (35) என்பவர், பரிகார பூஜை செய்து தருவதாக கூறியுள்ளார்.

கடந்த 29-ம் தேதி இரவு ஏ.பி.புதூரில் உள்ள வீட்டில் சக்திவேலை வைத்து பரிகார பூஜையை முடித்த தம்பதி, 30-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பர்னிச்சர் கடையில் பூஜை நடத்த திட்டமிட்டிருந்தனர். அன்றைய தினம் அதிகாலை பர்னிச்சர் கடையில் ஆறுமுகம் கொடூரமாக தாக்கப்பட்டும், ஈஸ்வரி அடித்துக் கொலை செய்யப்பட்டும் கிடந்தனர். ஈஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடி, பர்னிச்சர் கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம், 2 அலைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

கொலை வழக்கு பதிவு செய்து வெள்ளகோவில் போலீஸார் நடத்திய விசாரணையில், பரிகார பூஜை விஷயம் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான சக்திவேலை தேடி வந்தனர். நேற்றுமுன்தினம் இரவு மதுரையில் சக்திவேலை பிடித்து விசாரித்ததில், பர்னிச்சர் கடைக்கு பொருட்கள் வாங்க வந்து சென்ற அடிப்படையில் ஆறுமுகத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, குடும்ப விஷயங்கள் குறித்து சக்திவேலிடம் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் குழந்தை பிறக்க பரிகார பூஜை செய்யலாம் என்றும், அதை தானேசெய்து தருவதாகவும் சக்திவேல்தெரிவித்துள்ளார். 30-ம் தேதி அதிகாலை பரிகார பூஜை செய்வதுபோல நடித்து, எதிர்பாராத நேரத்தில் ஆறுமுகம் மற்றும் ஈஸ்வரியை தாக்கிக் கொன்று நகை, பணம்உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், அவரை நேற்று கைது செய்தனர்.

2 கொலை வழக்குகள்

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "கைதுசெய்யப்பட்ட சக்திவேல் மீது திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே 2 கொலை வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் ஜாமீனில் வெளிவந்தவர், மூன்றாவது கொலையை செய்துள்ளார்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்