திருப்பூர் - வஞ்சிபாளையம் சாலையில் நடைபெற்றுவரும் 4-ம் குடிநீர் திட்டப் பணிகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக வஞ்சிபாளையம் பகுதி பொதுமக்கள் கூறும்போது, "திருப்பூர் மாநகர் அருகே மங்கலம் கிராம மக்கள், அவிநாசி சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் பல்வேறுகிராமங்களில் இருந்து வருபவர்கள்கல்லூரி சாலை, திருப்பூர் புஷ்பா திரையரங்க வளைவு வழியாக நகருக்குள் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தற்போது, வஞ்சிபாளையம் சாலையில் காலை நேரங்களில்பலரும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரங்களில், மாநகராட்சியின் 4-ம் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள், அவற்றையொட்டிய பிற பணிகள் நடைபெறுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால், தினமும் பணிக்கு செல்வோர், பல்வேறு தேவைகளுக்காக திருப்பூர் வந்து செல்வோருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
சாலையின் நடுவில் பொக்லைன் அல்லது லாரியை நிறுத்தி பணிகளை மேற்கொள்வதால், பிற வாகனங்கள் எதுவும் செல்ல முடிவதில்லை. அவசரத் தேவைக்குக்கூட உடனடியாக செல்ல முடிவதில்லை. இரண்டு முதல் மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு இப்பணிகள் நடப்பதால், இருபுறங்களிலும் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல,மங்கலம் சாலை, ஆண்டிபாளையம், குளத்துப்புதூர் பகுதியிலும் சேதமடைந்துள்ள சாலையை செப்பனிட பலமுறை முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படாத நிலை உள்ளது., மேற்கண்ட பிரச்சினைகளில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago