கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்கமாக உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் டிசம்பர் 31-ம் தேதி இரவு நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முன்தினமும், நேற்றும் 2 ஏடிஎஸ்பிக்கள், 9 டிஎஸ்பிக்கள், 18 ஆய்வாளர்கள், 78 உதவி ஆய்வாளர்கள், 170 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 675 போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குற்றத்தடுப்பு நடவடிக்கையாகவும், சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கிலும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 741 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் அந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகள் தொடர்பாக 272 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என, திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago