வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் சாயல்குடியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் முதல்வர் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தல்

சாயல்குடியில் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் மழைக்காலங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு முதல்வர் பழனிசாமி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி இருவேலி, சந்தனமர ஓடை, எம்ஜிஆர் ஊருணி, இலந்தைக்குளம் வரத்து கால்வாய்கள், சாமியார் ஊருணிக்குச் செல்லும் வரத்து கால்வாய் ஆகியவை 60 அடிக்கு மேல் அகலம் கொண்டவையாக இருந்தன. தற்போது தனிநபர்கள் ஆக்கிரமிப்பால் அகலம் 10 அடியாக குறுகிவிட்டது‌. மேலும், நகர் பகுதியில் இருந்து நாள்தோறும் வெளியேறும் 5 லட்சம் லிட்டர் கழிவுநீர் செல்லும் கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால், ஆண்டுதோறும் மழைக் காலங்களில் சாயல்குடி மாதாகோவில் தெரு, சீனி ஆபீஸ் தெரு, அண்ணா நகர் தெரு, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, மாதவன் நகர் மற்றும் சாயல்குடி பஜார் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்து விடுகின்றன. சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், சீர்மரபினர் மாணவியர் விடுதிக்கு முன்பாகவும் தண்ணீர் குளம்போல் தேங்கிக் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன், சுகாதாரக் கேடு நிலவுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து சாயல்குடியைச் சேர்ந்த ஆதித் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.பாஸ்கரன் கூறியதாவது: கழிவுநீர் கலந்த நீரில் நடந்து செல்லும் மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதிகளில் பாம்பு உள்ளிட்டவை வீடுகளில் புகுந்து விடுகின்றன.

தணணீர் தேங்குவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காணுமாறு பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தண்ணீர் தேங்காமல் இருக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும். இது தொடர்பாக இன்று ராமநாதபுரத்துக்கு வரும் முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE