கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2020-ம் ஆண்டில் 90 சதவீத குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு களவு போன ரூ.1 கோடியே 46 லட்சத்து 26 ஆயிரத்து 770 மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி பண்டி கங்காதர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எஸ்பி கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டகாவல் துறையினரின் சிறப்பான பணி காரணமாக கடந்த ஆண்டை விட குற்றச் சம்பவங்களும், விபத்துகளும், விபத்துகளால் ஏற்படும் மரணங்களும் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த 2020-ம் ஆண்டில் 35 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019-ம் ஆண்டில் நடந்தசாலை விபத்துகளில் 341பேர் உயிரிழந்தனர். 2020-ல் நடந்த விபத்துகளில் 268 பேர் உயிரிழந்துள்ளனர். 1010 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 2020-ம் ஆண்டில் 26 ஆயிரத்து 473பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்ய, வட்டார போக்கு வரத்து அலுவல கத்துக்கு பரிந்துரைக் கப்பட்டது.
இதில், 22 ஆயிரத்து 851 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்து ஆணை பெறப்பட்டது.குற்ற வழக்குகளைப் பொறுத்தவரையில் 2020-ம் ஆண்டில் 38 கொலைகள் நடந்துள்ளன. இதில் 2 ஆதாய கொலைகள். இதேபோல் கடந்த ஆண்டில் 3 கொள்ளை சம்பவங்கள், 7 வழிப்பறிகள் மற்றும் 57 வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. பிறவகை திருட்டு சம்பவங்களில் 109 வழக்குகள் பதிவானது.
இதில், 90 சதவீத வழக்குகள் கண்டறியப்பட்டு, 90 சதவீத சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. அதன்படி ரூ.1 கோடியே 60 லட்சத்து 98 ஆயிரத்து 680 மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனதில், ரூ.1 கோடியே 46 லட்சத்து 26 ஆயிரத்து 770 மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட 6757 மனுக்களுக்கும், எஸ்பியிடம் நேரடியாக அளிக்கப்பட்ட 3014 மனுக்களுக்கும் உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. நீதிமன்றம் மூலம் 30 வழக்குகளில் 7 ஆண்டுக்கு மேல் தண்டனைகள் கிடைக்க சாட்சிகள் சரியான முறையில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளது.
சூளகிரி அருகே மேலு மலையில் லாரியில் இருந்து சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 9 தனிப்படைகள் மூலம் கொள்ளை கும்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எஸ்பி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago