பொது விநியோக திட்டத்தின் கீழ் ரூ. 2,500 ரொக்கத்துடன் கூடியபொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்வு விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் நேற்று நடைபெற்றது.
ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் அமைச்சர் சி.வி.சண்முகம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்கி பேசும்போது, ‘‘பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக ரூ.2,500 ரொக்கம், ரூ.22.50 மதிப்பீட்டிலான 1 கிலோ பச்சரிசி, ரூ.46.25 மதிப்பிலான 1 கிலோ சர்க்கரை, ரூ.45 மதிப்பிலான 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை 5 கிராம் ஏலக்காய், ரூ.30 மதிப்பீட்டிலான ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.23 மதிப்பிலான துணிப்பை என அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரருக்கு ரூ. 2,666.75 மதிப்பிலான பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலையை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 2.60 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இது வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 5,86,097 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள தொகை ரூ.156.30 கோடி ஆகும். இத்திட்டத்தில் முறைகேடு ஏதேனும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக வெளிப்படையாக ரூ.2,500 ரொக்கத்தினை வழங்க வேண்டும் என தனியே ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வில் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன், வானூர் எம்எல்ஏ சக்ரபாணி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சரஸ்வதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பிரபாகரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் பாலகிருஷ்ணன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி (எ) ரகுராமன், மாவட்ட மொத்த பண்டக சாலை தலைவர் பசுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago