அத்திக்கடவு - அவிநாசி பாசனப் பகுதியில் சிப்காட் தொழில் பூங்காவை கொண்டுவர வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு பாரதிய கிஷான் சங்கதிருப்பூர் மாவட்ட தலைவரும், அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பாளருமான மா.வேலுசாமி அனுப்பியுள்ள கடித விவரம்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்துக்கு உட்பட்ட தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார்ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிகளுக்குரிய சுமார் 890 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் மூலமாக தத்தனூர் இன்டஸ்ட்ரியல் பார்க் என்ற திட்டத்துக்கான அளவீட்டு பணிகளை தடுக்க வலியுறுத்தி சட்டப்பேரவை தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக பொதுமக்களிடம் பேசிய சட்டப்பேரவை தலைவர் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்றால், அந்த திட்டத்தை அரசு கொண்டுவராது என உறுதியளித்தார். ஆனால், அவர் உறுதியளித்த நாளில் பன்னாட்டு நிறுவனத்துடன் சிப்காட் மூலமாக தத்தனூர் தொழில் பூங்கா திட்டத்தை ரூ.2,500 கோடியில் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசு மேற்கொண்டுள்ளது.
அவிநாசி உட்பட பல லட்சம் மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை காக்க அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை கொண்டு வந்து உதவிய அரசு, இனிமேல் விவசாயம் செழிக்கும் என்ற கனவில் இருந்த எங்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் தொழில் பூங்கா திட்டத்தை கொண்டுவந்தது சரியா?
ஏற்கெனவே, எங்கள் பகுதியிலுள்ள பெருந்துறை சிப்காட், திருப்பூர் சாயக்கழிவு ஆகியவற்றால் நிலம், நீர், மண் ஆகியவை பாதிக்கப்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயத்தில் மிகவும் பின்தங்கியுள்ள, விவசாயத்துக்கு பயன்படாத நிலங்கள் உள்ள பகுதியில் கொண்டுவர வேண்டிய சிப்காட் தொழிற்பூங்காவை, அத்திக்கடவு - அவிநாசி பாசனப் பகுதியில் கொண்டுவர வேண்டாம்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் இத்திட்டத்தை நிறைவேற்றினால், அறப்போராட்டங்கள் மூலமாக எங்களது வாழ்வாதாரத்தையும், விளைநிலங்களையும் மீட்போம். எங்கள் வாழ்வாதாரத்தை முதல்வர் காக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago