செங்கை மாவட்டத்துக்கு நபார்டு வங்கிசார்பில் 2021-22-ம் நிதி ஆண்டுக்கு ரூ.4,671 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்துக்காக நபார்டு வங்கி தயாரித்துள்ள வங்கிகளுக்கான 2021-22 ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன்திட்ட அறிக்கையை, ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் வங்கியாளர்கள் கூட்டத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இதில் நபார்டு வங்கி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வளம்சார்ந்த கடன்திட்ட அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 2021-22-ம் நிதிஆண்டுக்கு ரூ.4,671 கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்காக கடன் அளவு ரூ.3,150 கோடி, சிறு குறு தொழில்களுக்கு ரூ.449 கோடி, சமூக கட்டமைப்புக்காக ரூ.478 கோடி, ஏற்றுமதி கடனாக ரூ.147 கோடி, கல்விக் கடனாக ரூ.224 கோடி, வீட்டுக் கடனுக்காக ரூ.128 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டு வரைவு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்ட அறிக்கையை ஆட்சியர் வெளியிட, காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் பி.மதி பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.பிரியா, வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் விந்தியா ரமேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆ.கருணாகரன், வங்கி மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்காக கடனளவு ரூ.3,150 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது வரவேற்தக்கது என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago