தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்கக் கூடாது ராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் இந்த வகை மீன்களை வளர்க்க வேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அங்கீகரிக்கப்படாத ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்தால் பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கிக் கொள்ளும். மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காலங்களில் இவை ஏரி, ஆறுகளில் சென்று பிற மீன் இனங்களை அழிக்கும். இதன் மூலம் குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களைத் தவிர வேறு எந்த மீன்களும் பிழைக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகும்.

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மீன் பிடிப்பதற்கு வழியில்லாமல் போய்விடும். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் விவசாயிகள் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை உற்பத்தி, வளர்ப்பு மற்றும் விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் இந்த வகை மீன்களை வாங்க வேண்டாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE