வரத்து குறைவால் உச்சத்தில் பூக்கள் விலை மல்லிகை கிலோ ரூ.4000, கனகாம்பரம் ரூ.2000

By பி.டி.ரவிச்சந்திரன்

பனிப்பொழிவால் பூக்கள் வரத்துக் குறைந்ததையடுத்து திண்டுக்கல், நிலக்கோட்டை மார்க்கெட்டில் விலை அதிகரித்து விற்பனையாகின. அதிகபட்சமாக மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.4000, கனகாம்பரம் ரூ.2000-க்கும் விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நிலக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு வகையான பூ சாகுபடி நடந்து வருகிறது. விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பூக்களை திண்டுக்கல், நிலக்கோட்டை பூ மார்க்கெட்களில் விற்பனை செய்கின்றனர். இந்த மார்க்கெட்களுக்கு அருகிலுள்ள மதுரை, தேனி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

தற்போது பனிக்காலம் என்பதால் ஈரப்பதம் அதிகம் காரணமாக பூக்கள் செடியிலேயே அழுகிவிடுகின்றன.

இதனால் பூக்கள் சேதமடைந்து விற்பனைக்குக் கொண்டு செல்லமுடியாதநிலை ஏற்படுகிறது. விளைச்சல் குறைவு காரணமாக குறைவான பூக்களே மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகின்றன.

ஆனால், மார்கழி மாதத்தில் கோயில்களில் பூக்களின் தேவை அதிகம் இருப்பதாலும், புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்டங்களாலும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வரத்துக் குறைந்து, தேவை அதிகரிப்பதால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.

திண்டுக்கல் மார்க்கெட்டில் அதிகபட்சமாக மல்லிகைப் பூ விலை ஒரு கிலோ ரூ.4000 வரை விற்பனையானது. நிலக்கோட்டை மார்க்கெட்டில் ரூ.3800 வரை விற்பனையானது. கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.2000-க்கு விற்பனையானது. ஜாதிப்பூ ரூ.1000, காக்கரட்டான் ரூ.800, பன்னீர்ரோஸ் ரூ.160, செவ்வந்தி, சம்பங்கி ரூ.170, அரளி ரூ.170 என விற்பனையானது. கோழிக்கொண்டை ஒரு கிலோ ரூ.50-க்கு விற்னையானது.

நிலக்கோட்டை பூ வியாபாரி மகேந்திரன் கூறுகை யில்,"பனிப்பொழிவு காரணமாக பூக்கள் செடியிலேயே அழுகிவிடு கின்றன. இதனால் பூக்கள் வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனால், விழாக்கள் அடுத்தடுத்து இருப்பதால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. அடுத்து பொங்கல் விழா வருவ தால் பூக்கள் தேவை மேலும் அதிகரிக்கும். இதனால், பூக்களின் விலை குறைய வாய்ப்பில்லை" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்